தீண்டப்படாதவர்களுக்கெதிரான பாரபட்சங்கள

exams

 

தீண்டப்படாதவர்களுக்குக் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படும் பிரச்சினை தங்களுடைய ஆண்மையை மீட்டுப் பெறுவதற்கு அடுத்தபடியாக மிகக் கடுமையான பிரச்சினையாக உள்ளது. தீண்டப்படாதவர்களுக்கெதிராக இந்துக்கள் காட்டும் பாரபட்சத்தின் அளவை, வெளியில் உள்ளவர்கள் கற்பனைகூடச் செய்ய முடியாது. தீண்டப்படாதவர்களுக்கும் இந்துக்களுக்கும் போட்டி ஏற்படுகின்ற எந்தத் துறையிலும் தீண்டப்படாதவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்தப் பாரபட்சமும் மிகக் கடுமையானதாக உள்ளது.


சமூக உறவுகளில் இந்தப் பாரபட்சம், நடனம், குளித்தல், உண்ணுதல், குடித்தல், மற்போர், வழிபாடு ஆகியவற்றில் தடைகள் வடிவத்தில் வருகிறது. பொதுவாகப் பங்கேற்கும் எல்லாச் செயல்களிலும் பாரபட்சம் காட்டும் தடை விதிக்கப்படுகிறது.


பொது வசதிகள் விஷயத்தில் இந்தப் பாரபட்ச உணர்வு, பள்ளிகள், கிணறுகள், கோவில்கள், போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவற்றில் தீண்டப்படாதவர்களை ஒதுக்கி வைக்கும் வழக்கமாக வடிவெடுக்கிறது. பொது நிர்வாகம் தீண்டப்படாதவர்களுக்கெதிரான பாரபட்ச உணர்வில் ஆழ்ந்து ஊறிக் கிடக்கிறது. நீதி மன்றங்கள், அரசுத் துறைகள், கூட்டுறவு வங்கிகள், குறிப்பாகக் காவல் துறை ஆகியவற்றில் இது ஊடுருவியுள்ளது. நிலம், கடன், வேலை ஆகியவற்றைப் பெறுவதில் தீண்டப்படாதவர்களுக்கு எதிரான பாரபட்சம் மிகக் கடுமையாக உள்ளது. சேவைத் துறைகளில்தான் பாரபட்சம் மிக வலுவாகக் காட்டப்படுகிறது. சேவை விஷயத்தில் தீண்டப்படாதவர்கள் பணியில் சேருதல், பதவி உயர்வு ஆகியவை பற்றி நன்றாக அறியப்பட்ட விதிகள் உள்ளன. பெரும்பாலும், தீண்டப்படாதவருக்குப் பணியில் சேரவே வாய்ப்புக் கிடைக்காது. பல துறைகள் முற்றிலுமாக அவர்களுக்கு மூடப்பட்டுள்ளன.


ஜவுளி ஆலைகளின் நெசவுப் பிரிவு, ராணுவம் முழுவதும் தீண்டப்படாதவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அவர் பணியில் சேர்ந்து விட்டதும், ஒரு நிலைக்குமேல் அவர் உயரக்கூடாது என்ற வரம்பு உள்ளது. அவருடைய திறமை அல்லது பணிக் காலத்தின் அளவு ஆகியவை இதில் கருதப்படுவதில்லை. தீண்டப்படாதவர், இந்துக்களின் மீது நிர்வாக அதிகாரம் உள்ள பதவியில் வைக்கப்படக் கூடாது என்ற கோட்பாடு பொதுவாகப் பின்பற்றப்படுகிறது. இதன் விளைவாக, சேவையில் ஏதேனும் ஒரு பிரிவு முற்றிலுமாகத் தீண்டப்படாதவர்களைக் கொண்டதாக இருந்தாலன்றி, தீண்டப்படாதவர் பெறக்கூடிய முக்கியமான பதவி எதுவும் கிடையாது. விளக்கமாகச் சொன்னால், தீண்டப்படாதவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் இல்லாத ஒரே சேவைத் துறை துப்புரவுப் பணிதான். இதில் பாரபட்சத்திற்கு இடமில்லை; ஏனென்றால், துப்புரவுப்பணி முழுவதும் தீண்டப்படாதவர்களுக்கே விடப்பட்டுள்ளது; அதில் இந்துக்கள் போட்டியிடுவதில்லை. இதிலும் கூட, உயர் பதவிகளில் பாரபட்சம் வந்துவிடுகிறது. அசுத்தமான வேலைகள் எல்லாம் தீண்டப்படாதவர்களால் செய்யப்படுகின்றன.


ஆனால் அசுத்தத்தைத் தொடத் தேவையில்லாதவையும் அதிகச் சம்பளம் உள்ளவையுமான மேற்பார்வைப் பதவிகளில் எல்லாம் இந்துக்களே அமர்த்தப்படுகிறார்கள். இத்தகைய நிலைமையில் குடிமக்களின் உரிமைகள் என்பவை தீண்டப்படாதவர்களின் உரிமைகள் என்று பொருள்பட முடியாது. மக்களுக்காக, மக்களுடைய அரசு என்பது தீண்டப்படாதவர்களுக்கான அரசு என்று பொருள்பட முடியாது. எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பது, தீண்டப்படாதவர்களுக்குச் சம வாய்ப்பு என்று பொருள்படாது; எல்லோருக்கும் சம உரிமை என்பது தீண்டப்படாதவர்களுக்குச் சம உரிமை என்று பொருள்படாது. நாடு முழுவதிலும் எல்லா மூலை முடுக்குகளிலும் தீண்டப்படாதவர் இடையூறுகளையும் பாரபட்சங்களையும் சந்திக்கிறார்.


இந்தியாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களான தீண்டப்படாதவர்களுக்கு எங்கும் அநீதியே வழங்கப்படுகிறது. இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை, இதனால் ஏற்படும் துன்பங்களையெல்லாம் அனுபவிக்கும் தீண்டப்படாதவர்கள்தான் அறிவார்கள். இந்தப் பாரபட்சம் தான், தீண்டப்படாதவர்களுக்கு எதிரான மிகப் பலமான தடையாகும். அவர்கள் அதைவிட்டு மேலே வர முடியாமல் இது தடுத்து வைக்கிறது. இது தீண்டப்படாதவர்களின் வாழ்க்கையை வேலை இன்மை, தாக்குதல், கொடுமை முதலான எதையெல்லாமோ பற்றி அஞ்சுகின்ற வாழ்க்கையாக மாற்றியுள்ளது கொஞ்சமும் பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை இது.


மற்றொரு விதமான பாரபட்சம் உள்ளது; இது நுட்பமானது என்றாலும் மிகவும் உண்மையானது. தகுதியும் திறமையும் உள்ள தீண்டப்படாதவரின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் குறைப்பதற்குத் திட்டமிட்ட முயற்சி செய்யப்படுவது இந்தப் பாரபட்சமாகும். இந்துத் தலைவர் ஒருவர் பெரிய இந்தியத் தலைவர் என்று வர்ணிக்கப்படுவார். அவர் காஷ்மீரி பிராமணராயிருந்தாலும் அவரை காஷ்மீரி பிராமணர்களின் தலைவர் என்று கூறமாட்டார்கள். ஆனால் தீண்டப்படாதவரான ஒரு தலைவரைக் குறிப்பிடும்போது அவரது பெயரைக் குறிப்பிட்டு, தீண்டப்படாதவர்களின் தலைவர் என்று கூறுவார்கள். ஒரு இந்து டாக்டர் சிறந்த இந்திய டாக்டர் என்று வர்ணிக்கப்படுவார். அவர் ஒரு ஐயங்காராக இருந்தாலும், யாரும் அவரை ஐயங்கார் என்று குறிப்பிடமாட்டார்கள். ஆனால், ஒரு டாக்டர் தீண்டப்படாதவராக இருந்தால், அவரை இன்னார், தீண்டப்படாதவரான டாக்டர் என்றே கூறுவார்கள். ஒரு இந்துப் பாடகர், பெரிய இந்தியப் பாடகர் என்று வர்ணிக்கப்படுவார். அவரே தீண்டப்படாதவராக இருந்தால், அவர் தீண்டப்படாதவரான பாடகர் என்று வர்ணிக்கப்படுவார். இந்து மற்போர் வீரரைப், பெரிய இந்தியப் பயில்வான் என்று வர்ணிப்பார்கள். அவர் தீண்டப்படாதவராக இருந்தால், தீண்டப்படாதவரான பயில்வான் என்றே வர்ணிக்கப்படுவார்.


இது போன்ற பாரபட்சத்திற்குக் காரணம், இந்துக்களின் மனத்தில் தீண்டப்படாதவர்கள் தங்களைவிடத் தாழ்வானவர்கள் என்று ஊறிப்போயுள்ள எண்ணமாகும். தீண்டப்படாதவர்கள் எவ்வளவு தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் தீண்டப்படாதவர்களிடையே தான் பெரியவர்கள் என்பது இந்துக்களின் எண்ணம். அவர்கள் இந்துக்களில் பெரியவர்களாக உள்ளவர்களைவிடப் பெரியவர்களாகவோ அவர்களுக்குச் சமமானவர்களாகவோ கூட ஒரு போதும் இருக்கமுடியாது. இது இத்தகைய பாரபட்சம் சமூகரீதியான பாரபட்சம் என்றாலும் பொருளாதாரப் பாரபட்சத்தைவிட எந்த வகையிலும் கொடுமையில் குறைந்ததல்ல.


பாரபட்சம் என்பது சுதந்திரம் இன்மையின் மற்றொரு பெயரே. திரு. டானி கூறுகிறார் (தொழிலாளர் என்ன செய்ய முடியும் என்பதையே சுதந்திரம் என்கிறோம். பக். 83-85.) : “மார்க்கெட்டில் சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம், இடம் என்ற உண்மைகளுக்கு அப்பாற்பட்டுக் கிடையாது. அதற்கு என்ன பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பலவற்றின் இடையே ஒன்றைத் தெரிந்தெடுக்கும் வாய்ப்பை அது குறிக்கிறது. இந்தத் தேர்வு வாய்ப்பு, காகிதத்தில் இருந்தால் மட்டும் போதாது, உண்மையிலேயே இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமலிருப்பதற்கு இயல்வதை அது குறிக்கிறது. இதல்லாமல் அதற்குப் பொருள் எதுவும் இல்லை.


ஒரு மனிதன் சிந்திப்பவனாகவும் நிச்சயிப்பவனாகவும் செயல் செய்பவனாகவும் இருக்கும் போதுதான் மிகுந்த அளவில் மனிதனாக இருக்கிறான்; எனவே சுதந்திரத்தைப் பற்றிக் கவிஞர்கள் கூறியுள்ளவை எல்லாம் அதற்குத் தகும்; ஆயினும், அன்றாட வாழ்க்கை என்ற வசனத்தின் ஒரு பகுதியாகச் சுதந்திரம் என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சில தேவைகள் உள்ளன. உயிர் வாழ்வதற்கு வேண்டிய பொருளியல் தேவைகள், எழுத்திலும் பேச்சிலும் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் தேவை, பொதுவான விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் தேவை, தனது சொந்த முறைப்படி கடவுளை வழிபடுவதற்கு அல்லது வழிபடாமல் இருப்பதற்கான தேவை – என்று பல வகையான தேவைகள் உள்ளன. இவை நிறைவேறுவது அவனது நல்வாழ்வுக்கு அவசியமாகும். சுருக்கமாகச் சொன்னால், அவனுடைய சுதந்திரம் என்பது, இயற்கையின் வரம்புக்குள்ளும், மற்றவர்கள் இதே போன்ற வாய்ப்புகளை அனுபவிக்கும் வரம்புக்குள்ளும், தன்னுடைய தேவைகள் நிறைவேறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்பை அவன் பெற்றிருப்பதாகும்.”


மனிதனின் அத்தியாவசிய உரிமைகள் பற்றி ஏற்கெனவே உள்ள பட்டியல்களுடன் மேலும் ஒரு பட்டியலைத் தருவது என் நோக்கமல்ல. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் பொருந்துவதான இரண்டு கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். முதலாவதாக, இந்த உரிமைகள் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் தருவனவாக இருக்கவேண்டும் என்றால், ‘ரிட்ஸ் ஹோட்டலில் சாப்பிடும் வசதி படைத்தவர்கள் அனைவருக்கும் உள்ள உரிமைகள் என்பதுபோல உருவாக்கப்படக்கூடாது. இந்த உரிமைகளைப் பயன்படுத்தத் தேவையான சந்தர்ப்பம் நேரும்போது அவற்றை உண்மையிலேயே பயன்படுத்துவது சாத்தியமாக இருக்க வேண்டும். வாக்களிப்பதற்கும், கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதற்கும் உரிமைகள் இருந்தாலும், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துபவன் வெளியேற்றப்படுவான் என்றும், கூட்டாகச் சேர்ந்து செயல்படுபவன் வேலையிலிருந்து நீக்கப்படுவான் என்றும் நிலைமைகள் இருந்தால், இந்த உரிமைகள் பலனற்றவை ஆகிவிடாவிட்டாலும் இவற்றின் மதிப்புக் குறைந்து போகிறது.


இதே போலத்தான் மற்ற உரிமைகளும் ஆகின்றன, அதாவது, ஒரு தொழிலைத் தெரிந்தெடுத்துக்கொள்ள உரிமை இருந்தாலும் அந்தத் தொழிலுக்குத் தகுதி பெறுவதற்காகும் செலவு தாங்க முடியாததாக இருந்தால்; நீதி பெறுவதற்கு உரிமை இருந்தாலும் ஏழை மனிதன் யாரும் அதற்கு வேண்டிய பணம் செலவிட இயலாது என்றால்; உயிர் வாழ்வதற்கும், சுயேச்சையாயிருப்பதற்கும், மகிழ்ச்சியை நாடுவதற்கும் சுதந்திரம் இருந்தாலும், பிறப்பவர்களில் ஒரு கணிசமான விகிதம் பன்னிரண்டு மாதங்களுக்குள் இறந்துவிடும் சூழ்நிலை இருந்தால்; மீதமுள்ளவர்கள் செய்யும் மகிழ்ச்சி – முதலீடுகள் ஒரு சூதாட்டம் போல அமைந்தால் – இந்த உரிமைகள் மதிப்புக் குறைந்து போகின்றன. இரண்டாவதாகச் சுதந்திரத்திற்கு அவசியமாக உரிமைகள், ஒரு சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே சுதந்திரம் கிடைக்கச் செய்வனவாக இருக்க வேண்டும்.


ஒரு நாட்டில் 5 சதவீதம் மக்கள் பலதார மணம் புரிந்தவர்களாகவும், பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கணவர்கள் அல்லது மனைவிகள் இல்லாமல் கழிப்பவர்களாகவும் இருந்தால் அங்குத் திருமணம் என்பது ஒரு தேசிய முறைமையாகக் கருதப்பட மாட்டாது என்று யாரோ ஒர் அறிஞர் கூறியிருக்கிறார். சுதந்திரத்திற்கும் இது பொருந்தும். ஒரு சமூகத்தில் சில குழுவினர் தாங்கள் விரும்பியபடி செய்ய முடியும், மற்றவர்கள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாது என்றால், அந்தச் சமூகத்தில் என்ன சிறப்புகள் இருந்தாலும், சுதந்திரம் அவற்றில் ஒன்றாக இருக்க முடியாது. ஒரு சமூகத்தின் பகுதிகளாக உள்ள மக்கள் தங்களுடைய சக்திகளை உயர்ந்தபட்ச அளவுக்குப் பயன்படுத்தவும், தங்களுடைய கடமை என்று அவர்கள் கருதுவதைச் செய்யவும், கோட்பாடு அளவில் மட்டுமின்றி உண்மையிலேயே எந்த அளவுக்கு இயலுகிறதோ அந்த அளவுக்குத்தான் சுதந்திர சமூகமாக இருக்கும். மனிதர்கள் என்பதற்குத் தகுதியான வாழ்க்கை வாழும் வாய்ப்பு ஒரு சிறுபான்மையினருக்கு மட்டுமே கிடைப்பதாயிருந்தால், அதைச் சுதந்திரம் என்று கூற முடியாது; சிறப்பு உரிமை என்று கூறுவதுதான் பொருத்தமாயிருக்கும்.’

 

தீண்டப்படாதவர்களுக்கெதிரான பாரபட்சங்கள், இந்துக்களின் தீண்டப்படாதவர்களுக்கெதிரான பாரபட்சங்கள், இந்துக்களின் உள்ளத்தில் ஆழ்ந்து வேரூன்றியுள்ள வலுவான உணர்வுகள் சட்டத்திலும் நிர்வாகத்திலும் பிரதிபலிப்பதைக் காட்டுகின்றன. தீண்டப்படாதவர்களுக்குப் பாதகமான முறையில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்குமிடையே வேற்றுமை காட்டுவதை, நியாயப்படுத்தும் உணர்வுகள் இவை. சுதந்திரமான ஓர் உலகில் தீண்டப்படாதவர்கள் தங்கள் நிலைக்குமேல் உயர்ந்து, இந்து சமூக முறைமைக்கு ஓர் ஆபத்தாக உருவாகி விடுவார்கள் என்று இந்துக்கள் கொண்டுள்ள அச்சத்தில் தான் இந்தப் பாரபட்சங்கள் வேரூன்றி நிற்கின்றன. இந்துக்கள் தீண்டப்படாதவர்களை உயர்ந்த நிலையும் அவர்கள் மீது ஆதிக்கமும் பெற்றிருப்பதைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்து சமூக முறைமையின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்து சமூக முறைமை நீடிக்கும் வரை தீண்டப்படாதவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் தொடர்ந்து இருந்து வரும்.

 

---(பாபாசாகேப்டாக்டர்அம்பேத்கர்பேச்சும்எழுத்தும் - தொகுதி 9)---