சீர் செய்யும் மருந்து.

eco

 

இந்திய நாட்டு மக்கள் ஓர் பெரும் பொருட்செலவைச் சந்திக்கின்ற மற்றொரு தேர்தல் காலம் இது. கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து இந்தியாவை வழி நடத்திய பேராயக் கட்சியின் (காங்கிரசு) கடைநிலை ஆண்டின் இடைநிலை நிதி நிலை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பல்வேறு இடையூறுகளுக்கிடையில், நிதியமைச்சர் தாக்கல் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதார அளவுகோலாக விளங்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதன் மீது நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நாட்டு வரவு செலவுக் கணக்குகள் இந்தியக் குடிமக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் விளைவிக்கப் படுகிற உழைப்பு, உற்பத்தி, சேவை ஆகியவற்றின் வரைவிலக்கணக் குறியீடாகும். இந்தக் குறியீட்டின் வளர்ச்சி அல்லது தளர்ச்சியே உலகளவில் அந்நாட்டைப் பற்றியக் கணிப்பைத் தெரிவிப்பதாகும்.

அந்த வகையில் இந்திய நாட்டின் பொருளாதாரத் தன்மை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிற சில நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒன்று என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி எனினும் அந்த வளர்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக இழந்து வருகின்றோம் என்பது கவலைக்குரிய விடயமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் வளர்ச்சி சற்றொப்பு 11.4 விழுக்காடு எட்டிய நிலையிலிருந்து தற்போது தொடர்ச்சியாக கீழ்நோக்கிச்சென்று சற்றொப்ப 4.4 விழுக்காடு என்ற அளவில் சரிவடைந்துள்ளோம். இந்நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டுமே காரணம் என்று சொல்லி யாரும் அலறுவதோ, அங்கலாய்ப்பதோ, அரசியலாக்குவதோ சரியானதல்ல. மாறாக, இந்தச் சரிவுக்குக் கரணியமாக விளங்கும் அலகுகளை ஆராய்ந்து உரிய திருத்தம் மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், அரசியல் கட்சிகளும் செயல்பட முன்வர வேண்டும்.

நாம் செலவிடுகின்ற ஒவ்வொரு ரூபாய் நாணயத்திலும் 24 காசுகள் கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவும் 12 காசுகள் மானியங்களுக்காகவும் 11 காசுகள் நாட்டின் பாதுகாப்புப்படைகளுக்காகவும் 14 காசுகள் திட்டமிடப்படா செலவுகளுக்காகவும் ஒதுக்கிவிட்டு மீதியிருப்பதை வைத்துத்தான் உணவு, உடை, உறைவிடம், கல்வி, பொதுச் சுகாதாரம், உள்கட்டமைப்பு, ஆட்சிமுறை நிருவாகச் செலவு என அனைத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தில் கூட கடனாக வாங்கியது 29 காசுகளாகும்.

மண் வளமும், மனித வளமும் சாதகமாக விளங்கும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) மூலம் நாட்டின் வளத்தை மேம்படுத்த உதவும் நிதி நிலை ஆக்கத்தில் வரவாக அமையும் வரிகள் (Taxes) முறையாகவும், திட்டங்களைச் செயல்படுத்தச் செய்யும் செலவுகள் நேர்மையாகவும் செயல்படுத்தப்பெற்றால் இந்தியாவை விட சிறந்த ஒரு நாடு உலகில் எதுவும் இருக்க முடியாது. ஆம், பொருளாதார சுழற்சியின் இரண்டு வழிகளில் ஒன்று வரவு மற்றொன்று செலவு. இவைகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் துளைகள் சரிசெய்யப் பட்டால் அகண்ட, இருண்ட இந்தியாவில் ஓர் ஒளியைக் காணலாம். வரி ஏய்ப்பு என்பது பெருமளவில் அரசியல்வாதிகளாலும், பெருமுதலாளிகளாலும், பொது மக்களாலும் செய்யப்படுகின்ற ஒன்று. எவ்வாறு வரிச்செலுத்துவதை தவிர்க்க முடியும் என்றே நாம் ஆலோசனை செய்கின்றோம். இதன் மூலம் கருப்புப் பணப்பெருக்கமும், நிதிநிலை பற்றாக் குறையும் ஏற்படுகின்றது. இது குடிமக்கள் அரசை ஏமாற்றுகிறச் செயலாகும். இது பணப்பேராசையின் வெளிப்பாடு.

இன்று இந்தியாவின் நிதிநிலை பற்றாக்குறை (Fiscal Deficit) சற்றொப்ப 5 விழுக்காடு ஆகும். எனினும் நிதியமைச்சரின் தந்திரக் கணக்குப்படி ரூ 300 பில்லியன் அளவிலான மானியங்களை அடுத்த ஆண்டுக்குள் உருளச்செய்தும், பொதுத்துறை நிறுவன பங்குகள் இலாபத்தை அதிகப்படியாகத் தருமாறு ரூ 350 பில்லியன் அளவு வற்புறுத்திப் பெற்றுக் கொண்டதன் மூலமும் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.6 விழுக்காடு என தான் விரும்புகின்ற ஒரு முடிவு எண்ணிக்கையை எட்டும் வகையில் கணக்கீட்டை அமைத்துள்ளார். இது அரசு மக்களை ஏமாற்றுகின்றச் செயலாகும். இது பதவிப் பேராசையின் வெளிப்பாடு.

இந்தப் பேராசைகளைத் தாண்டி, ஏமாற்று வேலைகளைத் தாண்டி பெறப்பெறும் நிதியைச் செலவிடும் போது ஆளும் கட்சியினர் நடைமுறைப்படுத்தும் திட்டங்களில், திட்டமிடாத் திட்டங்களே அதிகம் என்பது ஊழலின் வித்தாக அமைகிறது. திட்டமிடப்படாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதே விவேகமான அணுகுமுறையாகும். எனினும் நடைமுறையில் எந்த அரசும் இதை கவனத்தில் கொள்வதில்லை. பத்து ஆண்டுகளில் நிறைவேறாத சட்டங்களும், திட்டங்களும் பத்து நாட்களில் நடைமுறைப் படுத்துவதென்பது கசிவு ஓட்டைகளைப் பெரிது படுத்தவே உதவும். இதில் இடைத்தரகர்கள், பெருவணிகர்கள், ஒப்பந்தக்காரர்களே பெரிதும் பயன் பெறுவர். ஏழை, எளிய மக்களின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாகி விடுகிறது.

மேலோட்டமாகப் பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தம் என யார் ஆட்சி செய்தாலும் பரப்புரை செய்யபடுகின்ற நிலையில், அரசு மக்களை ஏமாற்றுவதும், மக்கள் அரசை ஏமாற்றுவதும் தொடர்வதன் விளைவாகவே பொருளாதார அளவீடுகளின் அடிப்படையில் நம்நாட்டு நிலையை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தரவரிசையில் 137வது இடத்திலும், வணிகம் செய்ய உகந்த நாடுகளின் தரவரிசையில் 134 வது இடத்திலும், கல்வி வளர்ச்சிக்குச் செலவிடும் தரவரிசையில் 140 வது இடத்திலும் இந்தப் பெரு நாடு காட்சியளிக்கின்றது.

இந்த நிலையில் எவ்வாறு சரி செய்வது? வரி ஏய்ப்பையும், கருப்புப் பணத்தையும், ஊழல் வழிகளையும் சரிசெய்யும் வகையில் இந்தியாவில் தாள் நாணயப் பறிமாற்றங்கள் பெருமளவு தடைசெய்யப்படவேண்டும். இன்றைய இந்தியாவின் மொத்த நாணய மதிப்பில் 90 விழுக்காட்டிற்கு அதிகமாக உலாவரும் ரூ 500, ரூ 1000 தாள் நாணயங்கள் திரும்பப் பெறப்பட்டு வரி, வணிகப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி வழிச் செயலாக, சேவையாக வங்கி அட்டைகள் மூலம் மாற்றியமைக்கப் படவேண்டும். இதனினும் ஒரு படி மேலாக தற்போதைய வரி அமைப்பு முறை முற்றாக நீக்கப்பட்டு, ஏழை பணக்காரன், சிறியோர், முதியோர், ஆண், பெண், முதலாளி, தொழிலாளி என வேறுபாடுகளின்றி அனைத்து மக்களின் அனைத்து பணப்பரிவர்த்தனைகளிலும் ஒரே ஒரு விழுக்காடு அரசு வரியாக மேற்சொன்ன அடிப்படையில் வசூலிக்கப் பட்டால், பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டின் நிதிநிலை சீரடையும். அந்நிய முதலைகளோ, முதலீடுகளோ நம் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தாத நிலை உருவாகும்.

எனவே, மேற்சொல்லப்பட்டவைகளுடன் அனைத்திற்கும் தீர்வாக அமைவது வெளிப்படையான வணிகம், ஒழுக்கமும் நேர்மையும் இணைந்த உழைப்பு, மறைவானக் கொள்கையின்றி மாசில்லா மனம் படைத்த கட்சி அரசியல், கடமை உணர்வைப் போற்றும் ஊழியர் என்பவைகள்தாம் இந்தியாவைச் சீர்செய்யும் மருந்தாகும். புதிய வாக்காளர்களாக உருப்பெற்றிருக்கும் இன்றைய இளைய சமுதாயம் சிந்தித்துச் செயல் படும் என நம்புகின்றோம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர் - குறள் 954

--- S.குமணராசன் ---